’சூழலியல் மன்றம் – தொடக்க விழா’ (24.07.2024)

வணக்கம். எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறையின் சார்பாக, ’சூழலியல் மன்றம்’ தொடக்க விழா 24.07.2024 புதன் அன்று வளாகம் V, நான்காம் தள அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியரும் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளின் துறையின் தலைவருமான முனைவர் த.ஸ்ரீதேவி அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள். சூழலியல் மன்றம் ஒருங்கிணைப்பாளரும் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு.பலராமன் மன்றத்தின் நோக்க உரையை நிகழ்த்தினார்.

பின்னர், திருமதி ச.அழகேஸ்வரி, இயல்வாகை சூழலியல் இயக்கம், திருப்பூர் மற்றும் திரு மு.அசோக்குமார் சூழலியலாளர், சுட்டியானை சிறார்வெளி, திருப்பூர் ஆகிய இரு பெரும் ஆளுமைகளும் சூழலியல் மன்றத்தினைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர் சூழலியலாளர் மு.அசோக்குமார் பேசுகையில், சூழலியல் சார்ந்து இன்று நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய செயல்பாடுகளை மாணவர்கள் மத்தியில் பேசினார். தொலைநோக்குப் பார்வையோடு நாம் செய்ய வேண்டிய பணிகளையும் எடுத்துரைத்தார். இயற்கையைப் பாதுகாப்பதில் நமது பங்கு எந்த அளவிற்கு வேண்டும் என்பதையும் முன்வைத்து உரையாடினார். உடல் ஆரோக்கியத்திற்காக நாம் செய்ய வேண்டிய இயற்கை முறைப் பயிற்சியையும் மாணவர்களுக்கு எடுத்து இயம்பினார். குறிப்பாக நீண்ட காலம் வாழ்வதற்தற்கான வழிமுறைகளைப் பகிர்ந்துகொண்டார்.

மற்றொரு சிறப்பு விருந்தினர் இயல்வாகை அழகேஸ்வரி அவர்கள் சுற்றுச்சூழலில் உள்ள அரசியல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனது உரையை நிகழ்த்தினார். செயற்கை முறையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தினார். இயற்கை சார்ந்த முறையில் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை உட்கொள்ளும்படி கூறினார். மேலும்,  தற்காலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம், இன்றைய வாழ்வியல் முறைகள், இயற்கைப் பேரழிவுகள் வரக் காரணம், சூழலியலை நேசிப்பதற்கான வழிமுறைகள், இயற்கையோடு இயைந்த வாழ்வை மீட்டெடுத்தல், இயற்கையிலிருந்து விடுபட்டதால் ஏற்பட்ட விளைவுகள், அடுத்த தலைமுறைகளைக் காப்பதற்ககான தலையாயப் பணிகள் அதனை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள், மாணவர்களின் இளம் தலைமுறைகளின் பொறுப்புகள் பற்றியும் உரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் இருபதுக்கும் மேற்பட்ட பேராசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக, உயிரித் தொழில்நுட்பவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் மு.காமராஜ் அவர்கள் நன்றியுரையை ஆற்றினார். இந்நிகழ்ச்சியினை உயிரித் தொழில்நுட்பவியல் துறை இரண்டாமாண்டு மாணவி செல்வி ஜெ.பிரீத்தி அவர்கள் தொகுத்து வழங்கினார். நன்றி.