மாநில அளவிலான கருத்தரங்கம் (25.07.2024)
வணக்கம். எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம். சூழலியல் மன்றம் ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை, உயிரித் தொழில்நுட்பவியல் துறையுடன் சென்னை காக்கைக்கூடு பதிப்பகம் இணைந்து ’சூழலியல் தேடலில், சு.தியடோர் பாஸ்கரனின் தட(ய)ங்கள்’ என்னும் தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் 25.07.2024 வியாழன் அன்று வளாகம் V நான்காம் தளஅரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இ.எஃப்.எல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் த.ஸ்ரீதேவி அவர்கள் வரவேற்புரை நல்கினார். புல முதன்மையர் முனைவர் சி.சுந்தர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். அதில், சுற்றுச்சூழலில், காலநிலை மாற்றம்தான் நமது உலகத்தையே அதிகம் பாதித்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். அதன்பால், சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு அவசிய அவசரத் தேவையாக உள்ளது. அதற்கான சரியான தருணமாகத்தான் சூழலியல்சார்ந்த பணிகளை நமது சூழலியல் மன்றம் சார்பாக ஆக்கப்பூர்வமான தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கருத்தரங்க தொடக்க விழா சிறப்பு விருந்தினர்களாக, சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன், பறவையியலாளரும் காக்கைக் கூடு பதிப்பகத்தின் நிறுவனருமான செழியன் ஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து, இரண்டு அமர்வுகளாக நடந்த இக்கருத்தரங்கத்தின் முதல் அமர்வை சூழலியல் மன்றம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.பலராமன் அவர்களும், இரண்டாம் அமர்வை உயிரித் தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.பிரியா அவர்களும் ஒருங்கிணைத்தனர்.
சு.தியடோர் பாஸ்கரனின் பசுமை எழுத்து : சூழலியல் கரிசனங்களின் மீது பாய்ச்சிய வெளிச்சம் என்னும் தலைப்பில் ஆதி வள்ளியப்பன் அவர்களும், உயிரினங்களைத் தேடி உலகப் பயணம் என்னும் தலைப்பில் செழியன் ஜா அவர்களும், கொடிக்கானல் பறவைகளும் சீரழித்த சுற்றுலாத் தலங்களும் என்னும் தலைப்பில் எழுத்தாளர் நீரை.மகேந்திரன் அவர்களும், சு.தியடோர் பாஸ்கரன் தரும் காட்டுயிர் தரிசனங்கள் என்னும் தலைப்பில் ஊடகவியலாளர், பேச்சாளர் க.நாகப்பன் அவர்களும், சு.தியடோர் பாஸ்கரன் ஒரு பயணம் என்னும் தலைப்பில் சூழலியலாளர் குமரன் சதாசிவம் அவர்களும் தங்களது கட்டுரையை மணவர்களிடம் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பல துறை பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உயிரித் தொழில்நுட்பவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் மு.காமராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இக்கருத்தரங்கத்தைச் சூழலியல் மன்றம் ஒருங்கிணைப்பாளர், தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் சு.பலராமன், உயிரித் தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சியினை உயிரித் தொழில்நுட்பவியல் துறை இரண்டாமாண்டு மாணவி செல்வி ஜெ.பிரீத்தி அவர்கள் தொகுத்து வழங்கினார். நன்றி.